Thursday, January 5, 2012

என் இம்சைக்குரிய அம்மா

                 ஆம்..எல்லோரும் தத்தம் அம்மாக்களின் பாசத்தில் நனைந்து இருப்பார்கள். நானும் நனைந்து இருக்கிறேன்,அடாத மழையிலும் விடாது வாங்கிய திட்டுகளைப் பற்றி சொல்கிறேன்,’ஒழுங்கா பொண்ணா சுருவமா அடக்க ஒடுக்கமா இரு’,’தலையில எண்ணெய தேய்கிறியா முதல்ல’,’வெட்டியா டி.வி. பார்க்குற நேரத்துல புஸ்தகத்தை எடுத்து படிக்கலாம்ல’,மற்றும் எனக்கு மிகவும் பிடித்தது,’எதுத்து பேசுனனு வச்சுக்க்கோ,வாய கிழிச்சு அடுப்புல போட்ருவேன்’.இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

           ஒரு இனிய ஞாயிற்றுக்கிழமை பொழுது. நேரம் அதிகாலை ஒன்பது மணி,இனியதொரு கனவு முடிந்தது, தூக்கமும் மெதுவாகக் கலைந்தது.கமகமக்கும் வாசனை நாசியை உரசிக்கொண்டு சென்றது.முந்தைய இரவு பூரி சிக்கன் குழம்பைப்பற்றி பேசியது நினைவுக்கு வந்தது.ஹூம்....இது தான் சரியான சமயம்.கண்களை கொஞ்சமாக மட்டுமே திறந்து,அறையை நோட்டம் விட்டு பார்த்தேன்.

           லேசான ஒரு நிழல் உருவம் தெரிந்தது..இது எதுகுடா வம்பு என்று மறுபடியும் கண்களை இருக்க மூடிக்கொண்டேன்.
           
           ’குட்டிமா!’ குரல் கேட்டது.

           ’ம்ஹூம்...எதோ வேலை காத்திருக்கு..கவனமா இரு’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.

           'குட்டீய்ய்ய்ய்’ மறுபடியும் குரல்.

            மெலிந்த குரலில் ஒரு 'ம்ம்' மட்டும் அனுப்பினேன்.

           ’வாசலை கூட்டித் தெளித்து ஒரு நல்ல கோலம் போட்டிருயா..?’
         
           ‘ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா காலங்காத்தால எழுப்பி இது என்ன இம்சை’ என்று முனங்கிக்கொண்டே மணியைப் பார்த்தேன்.முள் 9.10 யை  தொட்டுக்கொண்டிருந்தது.தலையைத் திருப்பி அம்மாவைப் பார்த்தேன்.

           கைகளை கால் முட்டியால் முட்டுக்கொடுத்துக்கொண்டு,சுவற்றில் சாய்ந்து கொண்டு அமர்ந்து இருந்தார்.கையில் சுட சுட காப்பி,ருசித்துக்கொண்டிருந்தார்.திருவாளர் தம்பியார் அவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

           ' என்ன அநியாயம் ! ஒன்பது மணி வரைக்கும், தலைமாட்டுல் உட்கார்ந்து விட்டு, இவ எப்ப எந்திரிப்பா வேலை சொல்லலாம்னு ! என்ன ஒரு வில்லத்தனம்'.சினுங்கிப் பார்த்தேன்.அடுத்து முனங்கிப் பார்த்தேன்.படுக்கையை விட்டு எழாமல் டி.வி. பார்த்தேன்.மணி 9.30.

          ’தூங்குனது போதும்,மரியாதையா எந்திருக்கிறியா தலையில தண்ணிய ஊத்தவா ..?’ 

          நமக்கு தான் இது பழக்கமாச்சே! எரிச்சலோடும் சோம்பேறித்தனத்தோடும் பல் துலக்கினேன். நேரம் 9.45.

         ‘அம்மா..டீ’.

         ‘இந்தா இருக்கு எடுத்துக்கோ!’.

          சூடான டீயுடன் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவிடம் சென்று அமர்ந்தேன்.கடைசி இரண்டுப்பக்கங்களை வாங்கினேன்.டீ,பேப்பர்,அப்பாவுடன் நாட்டு நடப்பு அரட்டை,இனிதாகத்தான் இருந்தது. நேரம் 10.00.

          ’லொட லொடனு பேசாம ஒழுங்கா வேலைய பாரு!முடிச்சிட்டேன்னா சாப்பிடலாம்’ எங்கிருந்தோ குரல் வந்தது.
       
           ’வேலைய முடிச்சுருடா..அப்புறம் நீ ப்ரீ-யா இருக்கலாம்ல’ என்றார் அருமை தந்தை.அவரும் கட்சி மாறிட்டார்.
       
           உள்ளிருந்து மணக்கும் குழம்பு வேறு நாக்கை அழைத்தது.வயிறும் கெஞ்சியது.ஹூம்ம்ம்..என் அம்மாவின் சமையலுக்கு முன் நான் தோற்றவள் தான்.என் தாயின் தவப்புதல்வர் தன் எட்டாவது பூரிக்கு சேவை புரிந்துகொண்டிருந்தார். ஒரு வழியாக வாசலை சுத்தம் செய்து அவசரமாக ஒரு கோலத்தையும் போட்டு முடித்தேன்.

           ’என்ன இவ்ளோ சீக்கிரம் கோலம் போட்டுட்ட..?’ என்று நக்கல் அடித்தார் பக்கத்து வீட்டு ஆண்டி.

           எதையும் கண்டு கொள்ளாமல் வேகமாக உள்ளே சென்று சுட சுட பூரியையும் சிக்கன் குழம்பையும் சுவைத்தேன்.போராடிப் பெற்ற பூரி அல்லவா,ருசியாய் தான் இருந்தது.

பல வருடங்களுக்கு பிறகு,
.
.
.
.
.
          ஒரு இனிய ஞாயிற்றுக்கிழமை பொழுது, நேரம் அதிகாலை ஒன்பது மணி,இனியதொரு கனவு முடிந்தது தூக்கமும் மெதுவாகக் கலைந்தது.இரவு முழுக்க ஓடிய ஹீட்டரின் காயில் சூடாகி வந்த மெட்டல் வாசம்.குரட்டை விட்டு தூங்கும் பிள்ளைகளும் கணவரும்.மைக்ரோ வேவ்-ல் பாலை சுட வைத்து விட்டு பல் துலக்கி வந்தேன்.காப்பியை கலக்கி குடித்தேன்.பாதி குடிக்கையிலேயே ஆறிவிட்டது.அதற்கு மேல் குடிக்க பிடிக்கவில்லை.வைத்து விட்டேன்.கம்ப்யூட்டரில் செய்திகளை படித்தேன்.'dishwasher' - ல் சுத்தம் செய்யப் பட்டிருந்த பாத்திரங்களை எடுத்து வைத்தேன்.கலைந்து கிடந்த ஹால்-லை சரி செய்தேன்.’cereal'-ல் பாலை ஊற்றி சாப்பிட்டேன்.மதிய உணவிற்கு அனைவருக்கும் பிடித்தமான சிக்கன் பிரியாணிக்கு தேவையானதை தயார் செய்ய ஆரம்பித்தேன்.

       சூடான டீயும் பேப்பரும் அப்பாவும் அரட்டையும் சுவையான உணவும் கொண்ட ஞாயிற்றுக்கிழமைகள் எங்கே? என் இனிய இம்சைக்குரிய அம்மா..’I MISS YOU'

       
       

        

1 comment:

  1. sweet memories... makes my eyes wet with hearty smile...life goes..thers no time to sit and stare..

    ReplyDelete